அச்சுவேலி முக்கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மூன்று பேரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் கொலைசெய்யும் நோக்கில் இருவரை தாக்கி காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகளை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு இன்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மூன்று கொலைகளுக்கு மூன்று மரண தண்டனைகளும், இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும், 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேரந்த பென்னம்பலம் தனஞ்செயன் என்பவருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதென குறிப்பிட்ட நீதிபதி இளஞ்செழியன், தீர்ப்பு வழங்கப்படும் போது மன்றில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்குமாறும் மின் விளக்குகளையும் அணைக்குமாறு பணித்த பின்னர் தீர்ப்பினை எழுதியதோடு, தீரப்பெழுதிய பேனாவை உடைத்து எறிந்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியைச் சேர்ந்த தனது மனைவியின் தாயான நி.அருள்நாயகி, மனைவியின் தம்பியான நி.சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்ததோடு, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் குற்றவாளியான தனஞ்செயன் வெட்டி காயமேற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.