யாழ். கலைப்பீட மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு கோரி கலைப்பீட மாணவர்கள் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்கிடையில் தடைவிதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் மீள இணைத்துக்கொள்ளாதுவிடின், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அனுமதியுடன் அனைத்துப் பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 11ஆம் 12ஆம் நாட்களில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த 13 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல்கலைக்கழகத்தில் நேற்றையதினம் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் கலைப்பீட மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.