தமிழர்களுக்கான சர்வதேசத்தின் ஆதரவை கண்டு நல்லாட்சி அஞ்சுகிறது: சுமந்திரன்

சர்வதேச சமூகம் தமிழர்களுடன் கைக்கோர்த்துள்ளதை கண்டு நல்லாட்சி அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. ஆனால், இதனை சீர்க்குலைத்து சர்வதேச சமூகத்தை விரட்டியடிக்க சிலர் முயல்கின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுச்சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது, அரசியல் சுயலாபங்களுக்காக மக்கள் மத்தியில் தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால், சர்வதேசம் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும், ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டு விட்டது என்றும் பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன.

இது சர்வதேசத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தி அவர்களை விரட்டியடிக்கும் சிலரின் சதிச் செயலாகும். ஆனால், சர்வதேசம் தமிழ் மக்களுடன் எப்போதும் கைக்கோர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.