புலம்பெயர் இலங்கையர்கள் 1750 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்துள்ளார்.
23,000 பேர் இரட்டை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள போதிலும், 1750 பேருக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பின்னர் உருவாக்கப்பட்ட சமகால அரசாங்கத்தின் ஊடாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள், தாய் நாட்டில் வந்து செயற்படுவதற்காக இரட்டை குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த யுத்த காலத்தின் போது இவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது. அவ்வாறு வெளிநாடு சென்றவர்கள் தற்போது தாய் நாட்டில் வந்து வாழ முடியும். இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இரட்டை குடியுரிமை வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.