கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் வடகிழக்கு மாகாணங்களில் நியமனங்களை கோரி சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகள் 38வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்த்துவைக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவினர், இன்று மாலை மட்டக்களப்புக்கு வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட குறித்த குழுவினர் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என தெரிவித்ததுடன் அதற்காக இரண்டு மாத கால அவகாசத்தினையும் கோரியுள்ளனர்.
பல்வேறு கஸ்டங்களின் மத்தியில் கல்வியை கற்று பட்டங்களை பூர்த்திசெய்த மாணவர்கள் வீதிகளில் இருப்பதை அரசாங்கம் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்காது எனவும் அனைவருக்குமான நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கும் எனவும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞ.சிறிநேசன் ஆகியோர் கொண்ட பாராளுமன்ற குழுவினரே மட்டக்களப்புக்கு வருகைதந்து பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
கடந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே இன்றைய தினம் பட்டதாரிகள் வீதியில் நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த அரசாங்கம் எதிர்கால சந்ததியினரை கவனத்தில் கொண்டு சிறந்த கல்வி முறையை திட்டமிட்டு செயற்படுத்திவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்தார்.
எனினும் தமது கோரிக்கைக்கு தீர்வினை எழுத்துமூலம் வழங்கும் போதே தம்மால் போராட்டம் தொடர்பில் மீள்பிரிசீலனை செய்யப்படும் எனவும் அதுவரையில் தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற உறுதிமொழிகள் கடந்த காலத்தில் பல வழங்கப்பட்ட போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.