தமிழகத்துக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவுக்கு மீண்டும் தமிழக அரசு பதவி கொடுத்திருப்பது கோட்டை வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஊழல் குற்றச்சாட்டின் கீழ், பணம் பதுக்கலின் கீழ் வருமான வரிசோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒரே தலைமை செயலராக ‘பெரும் பெருமை’ பெற்றவர் ராமமோகன் ராவ். அதுவும் அவரது வீட்டில் மட்டுமல்ல..
நாடே வெட்கித் தலைகுனியும் வகையில் தமிழக அரசின் தலைமை செயலகத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்த வழிவகுத்தவர் ராமமோகன்ராவ். கருப்பு பணத்தை புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் வெள்ளையாக்க முயன்ற சேகர் ரெட்டியின் கூட்டாளி என சந்தேகிக்கப்பட்டவர் ராமமோகன் ராவ்.
ராமமோகன் ராவின் மகனும் அதிமுக அமைச்சர்களின் மகன்களும் தொழில் கூட்டாளிகளாக செயல்பட்டதாலேயே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்குப் பின்னர் தாம் உத்தமர்; என் வீட்டில் மகனே வசிக்கவில்லை. என் வீட்டில் எப்படி சோதனை நடத்தப்படலாம் என்றெல்லாம் நியாயவானாக பேசியவர் ராமமோகன் ராவ்.
ஆனால் வருமான வரித்துறை விசாரணைக்கு அழைத்தபோது போக்கு காட்டி டிமிக்கி கொடுத்தவர்கள்தான் ராமமோகன் ராவும் அவரது மகனும். இதனாலேயே தலைமைச் செயலர் பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் ராமமோகன் ராவ்.
அப்போது செய்தியாளர்களைக் கூட்டி நானே தலைமைச் செயலர்; என்னை நியமித்தது ‘அம்மா’ என்றெல்லாம் ஜெயலலிதா புராணம் பாடி ஏகத்துக்கும் அரசியல் பேசியவரும் இதே ராமமோகன் ராவ். அன்று தாமே தலைமைச் செயலர் என்றெல்லாம் கொந்தளித்தவர் இன்று எடப்பாடி அரசு ஏதோ ஒரு பொறுப்பை கொடுத்தவுடன் நிம்மதி அடைந்தவராக இருக்கிறார்.
ராமமோகன் ராவ் தமது பணிக்காலத்தில் பெரும்பாலான ஒப்பந்தங்களை முறைகேடாக தமது மகன் நிறுவனத்துக்கும் அப்போதைய அமைச்சர்களின் மகன்களின் நிறுவனத்துக்கும் வழங்கி ஆதாயம் அடைந்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தப்பட்டதா? விசாரணை முடிவுகள் என்ன? எதுவும் தெரிவிக்கப்படாமலேயே ராமமோகன் ராவ்-க்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.