இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா நமக்கு கொடுத்த கொடை என்று பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) சார்பில் போட்டியிடும் இ.மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட செரியன் நகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரசாரம் தொடங்கியதும் செரியன் நகரில் உள்ள கன்னியகா பரமேஸ்வரி கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி கும்பிட்டார். அவருடன் வேட்பாளர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சண்முகநாதன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் சென்றனர்.
அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் திறந்த ஜீப்பில் நின்று பேசியதாவது:-
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகள் மக்கள் இயக்கமாக இருந்த கட்சியை ஜெயலலிதா 1½ கோடி தொண்டர்களை கொண்ட தூய இயக்கமாக ஆக்கி இரும்பு கோட்டையாக அமைத்தார்.
கடுமையான உழைப்பால் உருவான ஆட்சியும், மாபெரும் இயக்கமும் அவருடைய மரணத்துக்கு பின்னால் எந்த குடும்பத்தின் கீழ் போகக்கூடாது என்று நினைத்தாரோ அவர்களுடைய கையில் சிக்கி இருக்கும் துர்பாக்கிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அந்த துரோக செயலை தடுத்துநிறுத்தி மக்கள் இயக்கமாக தொடர நாங்கள் தர்மயுத்தம் தொடங்கி இருக்கிறோம். தர்மயுத்தம் தொடங்கிய பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக கிடைத்து இருக்கிறது.
இங்கு போட்டியிடும் மதுசூதனன் இந்த தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். அனைத்து மக்களோடும் நேசமாக இருக்கக்கூடியவர். சேவை மனப்பான்மை கொண்டவர். இந்த இடைத்தேர்தல் ஒரு அளவுகோல். இந்த அளவுகோல் ஜெயலலிதா ஆன்மா மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
உறுதியாக மீண்டும் ஜெயலலிதா நல்லாட்சி தொடரவேண்டும். எனக்கு என்று எந்த உறவும் இல்லை. என்னுடைய உறவுகள் எல்லாம் மக்களும், தொண்டர்களும் தான் என்றும், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் இயக்கத்தை மக்களாட்சியாக நிலைநிறுத்துவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்.
நமக்கு கிடைத்து இருக்கும் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் இயற்கையாக ஜெயலலிதா ஆன்மா கொடுத்த கொடை. அந்த சின்னம் நமக்கு எப்போது ஒதுக்கப்பட்டதோ அப்போதே நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது.
ஆகவே இந்த தொகுதி மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை மதுசூதனனுக்கு வழங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்க செய்யும் வகையில் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.