டிரம்ப் பிறப்பித்த புதிய பயண தடை உத்தரவுக்கு காலவரையின்றி தடை: ஹவாய் கோர்ட்டு அதிரடி

சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவுக்கு வர 90 நாட்கள் தடையும், அந்த நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும் விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 6-ந் தேதி கையெழுத்திட்டு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஹவாய் மாகாணம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை அங்குள்ள மத்திய கோர்ட்டு நீதிபதி டெரிக் வாட்சன் விசாரித்து, டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 15-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் சார்பில் ஹவாய் மாகாண அட்டார்னி ஜெனரல் வாதிடும்போது, “இந்த தடையினால் சுற்றுலாப்பயணிகள் வருகை பாதிக்கிறது, வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவது பாதிக்கிறது, வேலைக்கு வருவதும் பாதிக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் சார்பில் வாதிடும்போது, “புதிய பயண தடை உத்தரவு, தீவிரவாதிகள் அமெரிக்காவினுள் நுழைவதை தடை செய்கிறது” என கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி டெரிக் வாட்சன், டிரம்ப் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த வழக்கின் முழுமையான விசாரணை நடந்து முடிய நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது. அதுவரையில் டிரம்ப் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் உடனடியாக 9-வது மேல்முறையீட்டு கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.