எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்கா அரசு அறிவித்த இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தியது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்தது.
இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கடன் வசதியில் இலவச லேப்டாப்கள் கொடுக்கப்பட உள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு பிசினஸ் வகுப்பில் செல்பவர்களுக்கு தங்களது பணிகள் தடைபடாமல் நடப்பதற்காக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக லேப்டாப்களை பெற்றுக் கொள்வார்கள். அடுத்த வாரத்தில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
அமெரிக்காவின் தடைக்கு ஆளாகி உள்ள வளைகுடா நாடுகள் மற்றும் எமிரேட்ஸும் இதே திட்டத்தை கடைபிடிக்க திட்டமிட்டு வருகிறது.