தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்தை ரத்து செய்யுங்கள்: சீனா

திபெத் புத்தமத துறவி தலாய் லாமா இந்தியாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுதெல்லாம், சீனா அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளது.

இதனிடையே, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி அசாம் செல்லும் தலாய் லாமா, அங்கிருந்து ஏப்ரல் 3-ம் தேதி அருணாச்சல பிரதேசம் செல்ல உள்ளார்.

இந்நிலையில், தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்தை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள சீன அதிகாரி கூறுகையில், “தலாய் லாமா வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல. அரசியல் தலைவரும் கூட. அவருடைய வரும் எங்களுடைய அரசாங்கத்தால் தொடர்ச்சியாக எதிர்க்கபட்டு வருகிறது” என்றார்.

முன்னதாக, பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற புத்த மாநாட்டில், தலாய் லாமா கலந்து கொண்ட விவகாரம் இந்தியா, சீனா இடையே மீண்டும் உரசலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.