புலிகளை அழிக்க ராஜபக்சர்களுக்கு உதவிய முக்கியஸ்தரின் புதுப் போராட்டம் தொடரும்!!

விமல் உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டாலும் அடுத்த போராட்டத்திற்கு தயாராகவே இருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

விமல் தனது அரசியல் பாதையில் ஒன்றிணைந்த தேசத்திற்காகவும், தேசிய உரிமைகளை நிலை நாட்டவும் அரும்பாடு பட்டவர்.

அதே போன்று பிரிவினை வாதிகளான விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்சவிற்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிற்கும் இராணுவத்திற்கும் அதிக பலத்தையும் உதவியையும் செய்தவர் விமல்.

அவர் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். விமல் உண்ணாவிரதம் இருந்தது நாட்டுக்காக, நாடு செல்லும் அபாய நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டவே.

அது அவரது தனிப்பட்ட இலாபத்திற்கு செய்யப்பட்ட போராட்டம் அல்ல. நாட்டிற்காக சேவை செய்பவர்களையும், செய்தவர்களையும் துரத்தி துரத்தி தண்டிக்கும் அரசிற்கு எதிராகவே உண்ணாவிரதம் செய்தார்.

இதனை நாட்டு மக்களும் கூட்டு எதிர்க்கட்சியும் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றது. அவர் மீண்டும் பிறந்து வந்துள்ளார்.

அதனாலேயே இந்த நாட்டில் முழு உரிமை உள்ள பௌத்த மதகுருமார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விமல் உண்ணா விரதத்தை கைவிட்டார்.

ஆனால் தேசத்தை காக்க பௌத்த மதகுருமார்களுடன் இணைந்து தொடர்ந்து விமல் போராடுவார் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க பௌத்தமும் தயாராக இருக்கின்றது எனவும் பந்துல தெரிவித்தார்.