யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தாக்குதலுக்கு இலக்காகிய கர்ப்பிணிப்பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி, நாகர்கோவில் பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தாக்குதலுக்கு இலக்காகிய 20 வயதுடைய கர்ப்பிணிப்பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நபர்களே தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறித்த கர்ப்பிணிப்பெண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் உள்ள கர்ப்பிணிப்பெண்ணின் வீட்டிற்கு நேற்றிரவு 9 மணியளவில் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு மூவர் சென்று வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிப்பெண் மாத்திரமே வீட்டில் இருந்ததால், அவர் கதவைத் திறக்க மறுத்துள்ளார்.
மேலும், “கதவைத்திறந்த போது எனது வயிற்றில் அடி விழுந்தது” என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தையும் அங்கு சென்று தாக்குதல் நடத்தியவர்களையும் பொது மக்கள் சிலர் புகைப்படங்களை எடுத்திருந்தனர்.
எனினும் குறித்த பகுதியில் தகராறு நிலவுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே தாம் அப்பகுதிக்கு சென்றதாக அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பருத்தித்துறை தலைமை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.