முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
மகிந்தானந்த அளுத்கமகே விடுத்திருந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார ரணசிங்க இன்று முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையான காலத்தில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் மற்றுமொரு வழக்கில் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான், மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அளுத்கமகேவுக்கு அறிவித்துள்ளார்.
மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் போர்வையில் அமைச்சின் பணத்தை பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து அவற்றை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் 5 கோடி ரூபாவுக்கும் மேலான பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.