தொழுகையை தவறாமல் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்

உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை அடிப்படையாகக்கொண்டு அவனது உயர்வு தாழ்வுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அது நிலையானது அல்ல, நிரந்தரமானதும் அல்ல.

இன்றைய வெற்றியாளன் நாளை தோல்வியை தழுவக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பழையன கழிந்து புதியன ஏற்படும்போது வெற்றியின் இலக்கும் மாறிக்கொண்டே போகின்றது.

இஸ்லாத்தின் தத்துவங்கள் போதிப்பதெல்லாம் இந்த உலக வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தின் சிறிது இளைப்பாறும் இடம் தான். இங்கு சற்று ஓய்வெடுத்து கொள்ளலாம். நமது மறுமைப்பயணங்களை எளிதாக்க கூடியவற்றை தயார் செய்து கொள்ளலாம். சக பயணிக்கும் நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவரது பயணத்தையும் இலகுவாக்க உதவி செய்யலாம்.

ஆனால் ‘ஈமான்’ என்ற இறையச்சத்தை நெஞ்சில் ஏந்திய ஒரு உண்மையான முஸ்லிம் இந்த உலக வெற்றிகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான். ‘உலக வெற்றி பொய்யானது. உண்மையான வெற்றி மறுமையில் தான் உள்ளது’ என்பதை இறையச்சம் கொண்ட மனிதன் அறிந்து கொள்வான்.

ஈமான் என்பது, ‘அல்லாஹ் ஒருவன் தான். அவன் தான் நம்மை எல்லாம் படைத்து பரிபாலித்து பரிபக்குவம் செய்பவன்’ என்று உறுதியான நம்பிக்கை கொள்வது ஆகும். இறைவன் ஏவிய கட்டளைகளை செவ்வனே செய்வதும், இறைவன் தடுத்தவற்றை விட்டு விலகி இருப்பதும் ஈமானில் ஒரு பகுதியாகும்.

அல்லாஹ் ஐம்பெரும் கடமைகளை மனிதர்களுக்கு நிர்மாணித்து தந்தான். அது கட்டாய கடமைகள் ஆகும். அதிலும் கூட சில விதிவிலக்குகள் உண்டு. நோயாளிக்கு நோன்பு கடமையில்லை. ஏழைகளுக்கு தர்மம் (ஜகாத்) கடமை இல்லை. பொருளாதார பின்னடைவு உள்ளவர்களுக்கு புனித ஹஜ் கடமையில்லை.

ஆனால் கொண்ட ஈமானில் ஒரு கீறல் கூட விழுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஏக இறை கொள்கையில் ஒரு விழுக்காடு கூட குறைவு செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.

அதுபோன்று தொழுகையிலும் எந்தவித சலுகைகளும், யாருக்கும் தரப்படவில்லை. ‘உயிர்போகும் அந்த ஆபத்தான கட்டங்களிலும் உன் உள்ளுணர்வு விழித்துக் கொண்டிருக்குமானால், கண்களின் இமைகளை இமைத்து, விரல்களை லேசாக அசைத்து தொழ வேண்டும். அதுவும் தொழுகையின் அந்த நேரம் வந்து விட்டால் உரிய நேரத்தில் தொழுதே ஆக வேண்டும்’.

இதன் அடிப்படையில் தான் உண்மையான வெற்றியாளர்களைப் பற்றி விவரித்து அல்லாஹ் தன் அருள்மறையிலே இந்த வசனத்தை மிக அழகாக பதிவு செய்துள்ளான்.

‘ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள். இன்னும் அவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் வெட்கத்தலத்தை பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதியையும் பேணுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பாதுகாத்து கொள்வார்கள். இத்தகையோர்தான் வெற்றியாளர்கள். சுவர்க்கத்தை வாரிசாக்கி கொள்பவர்கள்’. (திருக்குர்ஆன் 23:1-10)

அல்லாஹ் வெற்றியின் இலக்கணத்தை தொழுகையைக் கொண்டே ஆரம்பிக்கின்றான். தொழுகையை கொண்டே முடித்து வைக்கின்றான். ஆக தொழுகையில் தான் வெற்றி என்பதை உறுதி செய்கின்றான். வெற்றியின் பரிசாக சொர்க்கத்தை இறைவன் சுட்டிக்காட்டுகின்றான்.

அல்லாஹ்விற்கு பிடித்த அமல்களில் மிகவும் சிறந்த நற்செய்கை எதுவென்று நபிகளிடம் கேட்ட போது, ‘உங்களுடைய தொழுகையை உரிய நேரத்தில் குறிப்பிட்ட முறையில் முறையாய் நிறைவேற்றுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

எந்தவித படை பலமுமின்றி, நிராயுதபாணிகளாக, இறையச்சத்தையும், தொழுகையையும் மட்டுமே கொண்டு வெற்றி கொண்ட நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு.

பத்ர் யுத்தத்தில் நபிகளாருடன் இருந்தவர்கள் வெறும் முன்னூற்று முப்பத்து மூன்று ஏழை சஹாபாக்கள். அவர்கள் போர் வீரர்களும் அல்ல. போர்த்தளவாடங்கள் கொண்டவர்களும் அல்ல. அவர்களை எதிர்த்து நிற்பதோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்த்திறன் கொண்ட போர் வீரர்கள், குதிரை, ஒட்டக, யானைப்படை.

கண்மணி நாயகம் கண் துஞ்சவில்லை. தொழுகையில் நிற் கிறார்கள். தரையில் சிரம் பணிந்து அல்லாஹ்விடம் மன்றாடு கிறார்கள்.

பொழுது புலர்கிறது. எதிரிப்படைகள் துவம்சம் செய்யப்பட்டது. எங்கிருந்து வந்தது இந்த சக்தி. எந்த யுக்தியைப் பயன்படுத்தினார்கள். யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் வெற்றி கிட்டியது உண்மை.

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ‘தொழுகையில் வெற்றி இருக்கிறது’ என்பது மட்டும் தான். ‘உள்ளத்தின் உறுதியில், இறையச்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை மட்டும் தான்.

போர்க்களத்தில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விடலாம் என்ற நிலை இருந்தபோது, தொழுகை நேரம் நெருங்கி விட்டது. இறைகட்டளை அவர்களின் ஞாபகத்திற்கு வருகிறது.

‘நபியே! போர்க்களத்தில் அவர்களுடன் நீர் இருந்து அவர்களுக்கு தொழவைக்க இமாமாக நீர் நின்றால், அப்போது அவர்களிலிருந்து ஒரு பிரிவினர் உம்முடன் தொழ நின்று கொள்ளட்டும். இன்னும் தம் ஆயுதங்களையும் அவர்கள் தம்முடன் எடுத்து கொள்ள வேண்டும். எனவே உம்முடன் தொழும் அவர்கள் ஸஜ்தா செய்து தொழுகையை முடித்து விட்டால் உங்களுக்கு பின்னால் உங்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் நின்று கொள்ளவும். அப்போது தொழாமல் இருக்கும் மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் சேர்ந்து தொழுது கொள்ளவும்’. (திருக்குர்ஆன் 4:102)

வெற்றியைத் தோல்வியை நிர்ணயிக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தொழுகையைத் தாமதிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அப்படி என்றால், வீணான காரியங் களிலும், கூட்டம், விழாக்கள், சினிமா, கேளிக்கைகள் என்ற காரணங்களால் தொழுகையை தாமதிப்பது அல்லது உரிய நேரத்தில் தொழாமல் விட்டுவிடுவது முறையாகுமா?

இஸ்லாமிய படையினரிடையே இருந்த இரண்டு முக்கிய பண்புகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒன்று கடமையை முழு மனதாய் உறுதியாய் நிறைவேற்றுகிறார்கள். அச்சப்படுவதில்லை, இறப்பை கண்டு அஞ்சுவதுமில்லை. நம்பிக்கையோடு போராடுகிறார்கள். வெற்றியை அல்லாஹ்விடமே வேண்டு கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் தன்னகத்தே கொண்டவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் நம்பிக்கைக்கு அச்சாரமாக அல்லாஹ் சொல்கிறான்: ‘இன்னும் வலிமை மிக்க ஓர் உதவியாக அல்லாஹ் உமக்கு உதவியளிப்பதற்காகவும் இவ்வாறு வெற்றி அளித்தான்’ (திருக்குர் ஆன் 48:3) என்று அருள்பாலிக்கின்றான்.

எனவே இறை நம்பிக்கையோடு செயல்பட்டு, தொழுகையை தவறாமல் கடைப்பிடித்து ஈருலக வாழ்க்கையின் வெற்றிகளை நாம் பெற்றுக்கொள்வோம்.