வடக்கிலிருந்த 4 வனப்பகுதிகளை வில்பத்து வனப்பகுதியுடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டமை தொடர்பில் சில பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில்,
“வில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்து பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பெயரிடும் வர்த்தமானி கடந்த வாரம் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்டது.
இந்த வர்த்தமானியின் மூலம் தற்போது மக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேச மக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்த வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆகையினால் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.