ஐ.பி.எல். தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு தோன்றிய புதிய அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். இந்திய அணியின் சாதனை கேப்டனான டோனிதான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். கடந்த வருடம் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை. புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்தது.
இதனால் டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். டோனிக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்மித்தை கேப்டனாக நியமித்துள்ளது. இதை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல பெரும்பாலான வீரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் எப்படி இருக்கும். டோனியிடம் இருந்த ஸ்மித் ஆலோசனைகளை பெறுவாரா? என்ற கேள்வியெல்லாம் எழும்பியது.
இந்நிலையில் டோனிக்கும், எனக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்மித் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘எனக்கும் டோனிக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் சில தகவல்களை பரிமாற்றிக் கொண்டோம். டோனி மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவருடனான தொழில்முறையான நட்பில் கேப்டன் பதவி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’ என்றார்.