ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரன் போட்ட குறுக்குவழி திட்டம் அம்பலம்!

பணத்தின் மூலம், வாக்குகளை பெற்று ஜெயித்து விடலாம் என்ற திட்டத்தில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட களமிறங்கியுள்ளது இன்றைய கைது நடவடிக்கை ஒன்றின் மூலம் அம்பலமாகிவிட்டது.

ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம், சசிகலா அவசரமாக அதிமுக பொதுச்செயலாளரானது, சசிகலா சிறைக்கு போனது, சசிகலா சிறைக்கு போகும் முன்பாக, ஜெயலலிதாவால் கட்சியை விட்டே நீக்கப்பட்ட டிடிவி தினகரனை, அந்த கட்சிக்கே துணை பொதுச் செயலாளராக்கிய சசிகலாவின் செயல் போன்றவை மக்களிடம் கண்டிப்பாக வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கும்.

சிறு குழந்தைக்கே இந்த விஷயம் தெரியும்போது, எப்படி ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் துணிந்து போட்டியிடுகிறார் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கே எழுந்தது.

முதல்வராக முயற்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் தினகரன் தன்னையே களத்தில் முன்னிருத்தி இறக்கியுள்ளார். இதில் அவர் வெற்றி பெற்றால் அடுத்ததாக முதல்வராக முன்னேறுவார்.

இந்த தேர்தலில் அவர் போட்டியிட்டுவதற்கான காரணமும் அதுதான். எனவே தினகரன் கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் தேர்தலில் இறக்குவார் என கிசுகிசுப்பு உலவியது.

பணம் மட்டுமே பிரதானம் பணத்தை கொடுத்து மட்டுமே வெற்றியை பெற முடியும், மற்றபடி ஜெயலலிதா போன்ற முகபரிட்சையமோ, அல்லது நல்லாட்சி புரிந்துவிட்டதாக கூறியோ ஓட்டு கேட்டு செல்வது இயலாத காரியம் என்பதை தினகரன் அறிந்திருந்தார் என்கிறார்கள் அதிமுக அம்மா கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள்.

கிசுகிசு உண்மையானது இருப்பினும் தினகரனோ, அதிமுக உடையாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்கள் எனக்கே வாக்களிப்பார்கள் என்று கூறி வந்தார்.

ஆனால் கிசுகிசுக்களை உண்மையாக்குவதை போல ஒரு சம்பவம் இன்று அரங்கேறிவிட்டது. கருணாமூர்த்தி என்ற தினகரன் கட்சிக்காரர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு கண்காணிப்பு கருணாமூர்த்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் போலீசாரிடம் புகார் கொடுத்தது. இதையடுத்து இன்று போலீசார் கருணாமூர்த்தியை கைது செய்துள்ளனர். அவரை கைது செய்து பைக்கில் வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

தினகரன் பணத்தை வீசி எறிந்து மக்களை வாக்களிக்க வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் போட்டியிடுவது இப்போது ஆதாரத்தோடு அம்பலமாகிவிட்டது. ஆர்.கே.நகரில் ஸ்பெஷல் கவனம் வைத்துள்ள மத்திய அரசு, வாக்காளர்களுக்கு தினகரன் தரப்பிலிருந்து பணம் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவது கொசுறு தகவல்.