ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைஇலங்கையில் அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
உயிரைப் பணயம்வைத்தேனும் முன்னாள் படையினரை அணிதிரட்டி அதைத் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு சூளுரைத்துள்ளார் முன்னாள் படைவீரர்கள்’ ஒன்றியத்தின்ஏற்பாட்டாளரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.
அத்துடன், நாட்டுக்கு எதிராக ஜெனிவாவில் சாட்சியம் வழங்கிய அனைவரையும் ஆட்சிமாற்றத்தின் பின்னர் சிறையில் போடுவோம் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 27ம்திகதி முதல் மார்ச் 23ம் திகதி வரை சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் நடைபெற்றது.
இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படுகின்ற குறித்த மாநாட்டில் இலங்கைவிவகாரமும் இம்முறை முக்கிய இடத்தைப் பிடித்தது.
உபகுழுக் கூட்டங்களில்பங்கேற்பதற்காக அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஜெனிவாசென்றிருந்தனர்.
அந்தவகையில், படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்போலியானவை எனப் பிரசாரம் முன்னெடுப்பதற்காக முன்னாள் கடற்படை அதிகாரியானரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை மஹிந்த அணி களமிறக்கியிருந்தது.
முக்கிய ஆவணங்களுடன் ஜெனிவா பறந்த அவர், உப மாநாடுகளில் பங்கேற்றுபடையினருக்குச் சார்பாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தீவிரபிரசாரத்தை முன்னெடுத்தார். அத்துடன், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின்பிரதிநிதிகளுடனும் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு கடுமையான இராஜதந்திரச் சமருக்கு மத்தியில் இலங்கை குறித்தான பிரேரணைவாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேறியது.
2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாகநடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு வருடகாலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
மாநாடு குறித்து கருத்து வெளியிட்ட சரத் வீரசேகர கூறியவை வருமாறு:-
2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தவேஇலங்கைக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் பாரியதொரு இராஜதந்திர வெற்றியெனமக்கள் மத்தியில் காண்பிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது. இது வெற்றி அல்ல.இலங்கை மீது விரிக்கப்பட்டுள்ள வலைக்கு அரசும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
படையினர் குற்றமிழைக்கவில்லை என்று நாம் திட்டவட்டமாகக் கூறிவரும் நிலையில்,பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, போர்க்குற்றம் நடந்துள்ளது என்பதற்கு அரசேமுறைமுக ஒப்புதலை வழங்கியுள்ளது.
எனவே, இதை எப்படி இராஜதந்திர வெற்றி என்றுகூறமுடியும்.ஜெனிவாவில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்னுடன் கடும்தர்க்கத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நான் ஓயவில்லை. சிறந்த முறையில் பதிலடிவழங்கினேன்.
அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், பாக்கியசோதி சரவணமுத்து,நிமல்கா பெர்ணான்டோ ஆகியோர் இலங்கைக்கு எதிராகப் பரப்புரைகளைமுன்னெடுத்தனர். இது தேச விரோதச் செயலாகும்.
எனவே, எமது ஆட்சி வந்த பின்னர்இவ்வாறானவர்களை சிறையில் அடைப்போம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இனிமேல் இலங்கை மீது தீவிரப் பார்வையைச்செலுத்தும். அதன் அறிக்கையாளர்கள் நாட்டுக்கு அடிக்கடி வரும் சூழ்நிலைஉருவாகும்.
உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தப்படும்.படையினரைத் தண்டிக்குமாறு கோரப்படும். பழைய சம்பவங்களைக் கிளறுவதால்மீண்டும் கசப்புணர்வுதான் ஏற்படும்.
ஆகவே, உண்மைக் கண்டறியும் ஆணைக்குழுவைஅமைக்க இடமளிக்கமாட்டோம் என்றார்.