நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் அரசு கைச்சாத்திட வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படி நாலா புறங்களிலும் பொருளாதார, நிதி ஆகிய விடயங்களில் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடன் சுமையை சமாளிப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் எண்ணத்துடன் அரசு செயற்பட்டு வருகின்றது. இதற்கு இடமளிக்கமுடியாது.
சுகாதாரம் மற்றும் கல்வித்துறை என மத்திய அரசுக்கு கீழுள்ள சகல விடயங்களும் பாரிய பின்னடைவை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றன.
மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இவ்வருட இறுதிக்குள் விற்றால் மட்டுமே நாட்டின் கடன்களை அடைக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இதே கருத்தைத்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருந்தார். இவ்வாறு நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசுகளும் ஏதாவது ஒருவகையில், நாட்டின் பொதுச் சொத்துக்களை விற்பனை செய்வதிலேயே பிரதான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன.
ஆனால், இதற்கெல்லாம் நாட்டின் ஆட்சியாளர்களும் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும்தான் காரணமே ஒழிய, ஒருபோதும் பொதுமக்கள் அல்ல என்பதை நாம் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
சீரான ஒரு திட்டமிடல், இலாபகரமான முதலீடுகள் என்பவை இல்லாத காரணத்தால்தான் நாடு தற்போது இந்நிலைமையில் உள்ளது.
அந்தவகையில், மைத்திரி – ரணில் அரசினால் கூறப்படும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றால்தான் பொருளாதாரத்தை சீராக்க முடியும் என்ற கருத்தையும் எம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
மாறாக, இந்த ஒப்பந்தத்தில் அரசு கைச்சாத்திடுவதால் நாட்டுக்குப் பாரிய பின்விளைவுகள் மட்டும்தான் ஏற்படும்.
எனவே, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முன்னர் அதனை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து அங்கீகாரத்தை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.