முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இலங்கைப் படையினர் வசமுள்ள 468 ஏக்கர் காணிகளை விடுவிக்க, பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்று தகவல் வெளியிடுகையில்,
பாதுகாப்பு அமைச்சருடன் கடந்த வாரம் நடத்திய பேச்சுக்களை அடுத்து. கேப்பாப்புலவில் உள்ள 279 ஏக்கர் காணிகளை வரும் 2017 மே 15ம் நாளுக்கு முன்னர் விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது.
கேப்பாப்புலவு கிராமத்தில் உள்ள 248 ஏக்கர் அரசகாணிகளும், சீனியாமோட்டையில் உள்ள 31 ஏக்கர் தனியார் காணிகளும் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
அதேவேளை, பாதுகாப்பு அமைச்சுக்கு 5 மில்லியன் ரூபாவை புனர்வாழ்வு அமைச்சு வழங்கியதை அடுத்து இந்தப் பகுதியில் உள்ள மேலும் 189 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு, இணங்கியுள்ளது.
இந்தக் காணிகள் ஒரு மாதத்துக்குள் பொதுமக்களிடம் கையளிக்கப்படும்.
இதற்கமைய கேப்பாப்புலவு பகுதியில் மொத்தமாக 468 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவின் பேரிலேயே இந்த காணிகள் விடுவிப்பு இடம்பெறவுள்ளது.