அண்டார்டிக் கடலில் 333 திமிங்கலத்தை வேட்டையாடிய ஜப்பான்: உலகளவில் கடும் கண்டனம்

சீனா மற்றும் ஜப்பான் கடற்படையினர் ஆராய்ச்சி என்று கூறி அண்டார்டிக் கடலில் மிங்கே வகை திமிங்கலத்தை வேட்டையாடி வருகின்றன.

இதற்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜப்பானைச் சேர்ந்த ஐந்து கப்பல்கள் வேட்டையை தொடங்கின. இதன் கடைசி மூன்று கப்பல்கள் 83 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஷிமோனோசேகி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ஐந்து கப்பல்களிலும் சென்றவர்கள் 333 திமிங்கலத்தை வேட்டையாடியுள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் மீன்வளத்துறை கூறுகையில் ‘‘மிங்கே வகை திமிங்கலத்தின் இனப்பெருக்கம் மற்றும் ஊட்டசத்து சுழற்சி போன்ற ஆராய்ச்சிக்காகத்தான் வேட்டையாடுகிறோம். வேட்டையாடப்பட்ட ஆண், பெண் திமிங்கலங்கள் அனைத்தும் முதிர்ச்சியடைந்தவை. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் நிகழாது’’ என்று விளக்கம் அளித்துள்ளது.

ஆராய்ச்சி நிகழ்வாக அடுத்த 12 வருடத்தில் 4000 திமிங்கலத்தை வேட்டையாட ஜப்பான் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் அதிகரிக்க அதிகரிக்க சர்வதேச அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, ஜப்பானின் திமிங்கலம் வேட்டை ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தங்களது வருத்தத்தை தெரிவித்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், 2015-16-ல் வேட்டையை மீண்டும் தொடங்கியது.

தற்போதைய வேட்டைக்கு சர்வதேச மனிதாபிமான சொசைட்டி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ‘‘திமிங்கலத்தை வேட்டையாடுவதில் எந்த வகையான வலுவான அறிவியல் காரணங்களும் இல்லை’’ என்று அதன் நிர்வாகத் துணை தலைவர் கிட்டி பிளாக் தெரிவித்துள்ளார்.