ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு வரும் ஏப்ரல் 11-ம் தேதி ரசிகர்களை சென்னையில் சந்திக்கிறேன். ஆனால் அதில் அரசியல் நோக்கம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனால் ஒட்டு மொத்த மீடியாவும் போயஸ் கார்டனில் குவிந்தது.
சந்திப்பு முடிந்ததும் மீடியாக்களிடம் ரஜினி பேசினார். நீண்ட நாளைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பதால், ஏராளமான கேள்விகளை அவரிடம் வைத்தனர்.
அதில் ரசிகர் சந்திப்பு குறித்த கேள்விக்கு ரஜினி பதிலளிக்கையில், “ஏப்ரல் 2-ம் தேதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னை வருகிறார்கள். ஏப்ரல் 11-ம் தேதி நான் ரசிகர்களைச் சந்திக்கிறேன். என்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அதை நிறைவேற்ற 11-ம் தேதி சந்திக்கிறேன். அந்த சந்திப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து கலந்து பேசவே ஏப்ரல் 2-ம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. அரசியல் பேசவும் நான் விரும்பவில்லை,” என்றார்.