ஆர்.கே.நகரில் தொப்பி அணிந்து கொண்டு பணப்பட்டுவாடா செய்பவர்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி, தேமுதிக, சிபிஎம், பாஜக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலும் ஆட்டம், பாட்டம் என தேர்தல் களம் களைகட்டியுள்ளது.
அதிமுக இரண்டாக உடைந்திருப்பதால், சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக அம்மா கட்சி வேட்பாளர். டி.டி.வி. தினகரன் எப்படியாவது வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக 30 அமைச்சர்கள், 30 எம்பிக்கள், 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று மாலை தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கருணாமூர்த்தி என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் தினகரன். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் அணியை சேர்ந்தவர் இல்லை. இது திமுகவின் சதித்திட்டமாக ஏன் இருக்கக் கூடாது. தலையில் தொப்பி அணிந்து கொண்டு பணப்பட்டுவாடா செய்தால் நாங்கள் தான் பணம் அளிக்கிறோம் என்று அர்த்தமில்லை என்று தெரிவித்தார்.