மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல காட்டுவதாக புகார்: மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் சித்தரித்து பிரசாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.

இருவரும் வாக்காளர்களை கவர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி, இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

சின்னத்தை பிரபலப்படுத்த டிடிவி தினகரன் தொப்பியுடன் களமிறங்கியுள்ளார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் என்று கூறி வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினர் பயன்படுத்தும் மின்கம்பம் சின்னத்தை முடக்க வேண்டும் என அதிமுக அம்மா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல வடிவமைத்து மக்களை குழப்பி பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிடிவி தினகரன் சார்பில் தளவாய் சுந்தரம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் ஓபிஎஸ் அணியினருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் சித்தரித்து மக்களை குழப்பும் விதமாக பொய் பிரசாரம் செய்வதாக கூறியிருந்தார்.

இதையடுத்து ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் புகார் குறித்து வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 9 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.