ஸ்டம்பை பிடுங்கி விராட் கோலியை குத்த நினைத்தேன்: ஆஸி. வீரர் கோவன் சொல்கிறார்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன் வார்த்தை போர்கள் (ஸ்லெட்ஜிங்) அதிக அளவில் இடம்பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வார்த்தைப் போரை தாண்டி விமர்சனம் வரை எழுந்தது. டி.ஆர்.எஸ்., விராட் கோலி காயம் குறித்த விமர்சனம் அதிக அளவில பேசப்பட்டது. ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விராட் கோலியை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தது.

இதனைக் கடந்து தொடர் முடிந்த பின்னரும் விமர்சனங்கள் இன்னும் நின்றபாடில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் எட் கோவன், ஸ்டம்பை பிடுங்கி விராட் கோலியை குத்த நினைத்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து எட் கோவன் கூறுகையில் ‘‘ஒரு கிரிக்கெட் தொடரில் நான் விராட் கோலிக்கு எதிராக விளையாடினேன். அப்போது எனது அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தார். அப்போது ஆடுகளத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒரு வார்த்தையை கோலி கூறினார்.

தனிப்பட்ட விஷயம் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவை. நடுவர் விராட் கோலியை எச்சரிக்கும் வரை, கோலி தன்னுடைய கருத்து தவறு என்று நினைக்கவில்லை. நடுவர்கள் எடுத்துரைத்த பின்னர் விராட் கோலி தனது கருத்தில் இருந்து பின்வாங்கி மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஆனால், அந்த நிலையில் நான் ஸ்டம்பை பிடுங்கி அவரை குத்த வேண்டும் என விரும்பினேன்’’ என்றார்.

மேலும், நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். கிரிக்கெட்டில் ஆச்சரியப்படுத்தும் வகையில் விளையாடி வரும் அவர் என்னை தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.