சாய்னா விசேஷமான வீராங்கனை அல்ல: பி.வி.சிந்து பேட்டி

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் பலப்பரீட்சையில் இறங்கினர்.

பேட்மிண்டனில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை யார்? என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் சொந்த மண்ணில் அரங்கேறிய இந்த மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடைசியில் நேர்செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.சி. சிந்து.

வெற்றிக்கு பிறகு 21 வயதான சிந்து கூறுகையில், ‘ஒட்டுமொத்தத்தில் இது சிறந்த ஆட்டமாக அமைந்தது. 2-வது செட்டில் சாய்னா 20-19 என்று முன்னிலை பெற்றிருந்த போது கூட நம்பிக்கையை இழக்கவில்லை. வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்பினேன். அதை செய்து காட்டினேன்’ என்றார்.

‘ஒவ்வொரு முறையும் அவரை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும் என்ற அளவுக்கு அவர் ஒன்றும் விசேஷமான வீராங்கனை கிடையாது. மற்ற வீராங்கனைகளை போலத்தான் சாய்னாவும். யாருக்கு எதிராக களம் கண்டாலும் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். அவ்வளவு தான்’ என்றும் சிந்து குறிப்பிட்டார்.