எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர்ந்து நடைபெறுமென கேப்பாப்புலவில் 32வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
279 ஏக்கர் காணிகள் மே 15ம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படுமென அரசு அறிவித்துள்ளதை நம்பி நாங்கள் எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அரசாங்கம் விடுவிப்பதாக தெரிவித்துள்ள 217 ஏக்கர் காணிகளில் முதலில் விடுவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள 31 ஏக்கர் காணி போராட்டம் நடத்தும் மக்களுக்குச் சொந்தமானதல்ல.
இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடாது அரசாங்கம் போராட்டத்தை முன்னெடுக்கும் 138 குடும்பங்களுக்கும் உரித்தான காணிகளை உடனடியாக மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
கேப்ஹபாப்புலவில் இராணுவம் பலாத்காரமாக வைத்துள்ள எமது காணிக்கு செல்லும் வீதிக்கு இரு மருங்கிலுமே நாங்கள் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தி வருகிறோம்.
எமது போராட்டத்தைக் குழப்பும் வகையில் வீதிப் புனரமைப்பு வேலைரகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றாடல் பாதிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலருக்கு மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன.
எது எப்படியிருப்பினும் நாம் எமது காணிக்குள் காலடி எடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். இவ்வாறு கூறினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
அத்துடன் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த வாரம் நாம் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்து எம்முடன் கலந்துரையாடினர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடும்படி எம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை.
அரசு இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் தானும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக மாவை சேனாதிராசா பா.உ. தெரிவித்தார் எனவும் அவர்கள் கூறினர்.