வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட ஸ்தலத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உட்பட பலர் வருகை தந்து கலந்துரையாடியுள்ளனர்.
வவுனியாவில் காhணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 38வது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதார அமைச்சர், வவுனியாவில் இரத்த வங்கி மற்றும் மாமடுவில் சிறுநீரக நோய் சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட தலத்திற்கு வந்திருந்தார்.
இந் நிலையில் சுகாதார அமைச்சருடன் வட மாகாண ஆளுனர், வடக்கு சுகாதார அமைச்சர் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தமது கோரிக்கைகளை அமைச்சர் ராஜித சேனாரத்தினவிடம் முன்வைத்ததுடன், அதிகளவானோர் இறுதி யுத்தத்தின் போது இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருகை தரும்போது ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்தே இராணுவத்திட்ம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்ட முறைகள் தொடர்பாக தாய்மார் தமது ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.
இக் கருத்துக்களை செவிமடுத்த அமைச்சர், இது தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடுர்பான விபரங்களை தன்னிடம் வழங்குமாறும் அதனை வைத்து தான் உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்ததுடன் தனக்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வடக்கு சுகாதார அமைச்சர் ஊடாக தன்னிடம் கையளிக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தம்மிடம் உடனடியாக வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் உள்ளதாகவும் அதனை ஒரு வார காலத்தில் கையளிப்பதாகவும் தெரிவித்திருந்ததுடன் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆவன செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளை சிலரை புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் விடுவித்துள்ளதாகவும் மேலும் சிலரை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டாலும், அவர்கள் தொடர்பாக வழங்கு தாக்கல் செய்யப்பட வேண்டியுள்ளவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விடுவிப்பதாகவும் ஏனையவர்களை சட்ட திட்டங்களை ஆராய்ந்து விடுவிப்பதாகவும் தெரிவித்ததுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தியிருந்தார்.