ஜெயலலிதா வீட்டுக்கு பூட்டு: வெறிச்சோடிய போயஸ் கார்டன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் சமையல் அறை பூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை போயஸ்கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லம் 24 மணி நேரமும் களை கட்டியே காணப்படும்.

ஜெயலலிதாவின் தாய் சந்தியாவின் நினைவாக வேதா நிலையம் என்று அந்த வீட்டுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார். அந்த வீட்டை ஜெயலலிதா மட்டுமல்ல அவரை உயிராக நேசிக்கும் தொண்டர்களும் ஒரு கோவில் போலவே போற்றினார்கள்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு என்று அந்த இல்லமே எப்போதும் பரபரப்பாக இருக்கும். அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பிரதமர்கள் என்று பலர் தடம் பதித்த இடம் அது.

ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அந்த வீட்டை ஒரு நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் முன் வைத்தனர்.

ஆனால் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக 33 ஆண்டுகள் அதே வீட்டில் அவருடன் வாழ்ந்த சசிகலா, ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு போயஸ் கார்டனில் தங்கினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அங்கு தங்கினார்கள்.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு சென்றதும் போயஸ் கார்டன் இல்லத்தில் தங்குவதை அவரது குடும்பத்தினர் தவிர்த்து விட்டனர்.

போயஸ்கார்டன் பக்கம் யாரும் திரும்பி பார்க்காததால் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பிரமாண்டமான வெளிப்புற கேட் மூடப்பட்டு ஒரு சிலர் மட்டும் காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் மட்டும் தினமும் அலுவலகத்தில் சென்று பணிகளை கவனித்து வருகிறார்கள். 2 வேலைக்கார பெண்கள் மட்டும் வீட்டில் தங்கி பராமரிக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக சமையல் கூடத்தில் அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருந்து வந்துள்ளது. விருந்தினர்களை உபசரிக்க, பணியாளர்களுக்கு வழங்க என்று எப்போதும் சமையல் கூடம் பரபரப்பாக செயல்படும். ஆனால் இப்போது மூடப்பட்டு விட்டது.

அதே போல் ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய பல அறைகள், பூஜை அறை, நூலகம் அனைத்தும் மூடி கிடக்கிறது. பூஜை அறை உள்ளிட்ட சில முக்கியமான அறைகளை ஊழியர்கள் அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்து வருவதாக கூறப்படுகிறது.