80 ரன்னைத் தாண்டிவிட்டால் ஸ்மித், கோலியை கட்டுப்படுத்த முடியாது: பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஐ.பி.எல். சீசன் 10 ஏலத்தில் இவரை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 14.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் இவர்தான். இதற்கு முன் வாட்சனை ராஜஸ்தான் அணி 9.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது.

முதல்முறையாக ஐ.பி.எல். தொடரில் விளையாட இருக்கிறார். ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக பென் ஸ்டோக்ஸ் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். விளையாடுவது குறித்தும், உலக பேட்ஸ்மேன்கள் யார் சிறந்தவர்கள் என்பது குறித்தும் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அப்போது பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘தற்போதைய சூழ்நிலையில் ஜோ ரூட், விராட் கோலி, ஸ்மித் மற்றும் கேன் வி்ல்லியம்சன் ஆகிய நான்கு பேர் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் அவுட் ஆக மாட்டார்கள். அவுட்டாக விரும்பவும் மாட்டார்கள். அவர்கள் பெயர்களில் பெரிய சதம் (இரட்டை சதம் அல்லது முச்சதம்) இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அவர்கள் போட்டியின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். எந்தவொரு அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போதும், ஜோ ரூட்டை விரைவில் அவுட்டாக்க விரும்புவார்கள். நாங்கள் கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகியோரை விரைவில் அவுட்டாக்க விரும்புவோம்.

கேன் வில்லியம்சனை அவுட்டாக்குவது கடினம். தேவையில்லாமல் பந்து வீச்சாளர்களை தண்டிக்கமாட்டார். ஆனால் ஸ்மித் மற்றும் கோலி ஆகியோர் 80 அல்லது 100 ரன்களை தாண்டிவிட்டால், பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள். வில்லியம்சன் ஆடுகளத்தில் நின்று விட்டால் நின்றதுதான். அவரது ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் இறுதியில் 150 அல்லது 200 ரன்னை தொட்டுவிடுவார்’’ என்றார்.