`அஞ்சாதே’ படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிய பிரசன்னா, பின்னர் மிஷ்கின் இயக்கிய `அஞ்சாதே’ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இதையடுத்து நாயகனாகவும், துணை நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள `பவர்பாண்டி’ வருகிற ஏப்ரல் 14-ல் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக அவர் நடித்து வரும் மற்ற படங்களின் கதைகளையும் தேர்வு செய்தே நடித்து வருகிறார். அவர் தற்போது `நிபுணன்’, `துப்பறிவாளன்’, `திருட்டு பயலே 2′ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரசன்னா மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. தெலுங்கில் சாய் தரம் தேஜா – மெஹ்ரின் பிர்சீடா இணைந்து நடிக்க உள்ள `ஜவான்’ என்ற படத்தில் இவர் வில்லனாக நடிக்க உள்ளாராம். பி.வி.எஸ்.ரவி இயக்கும் இப்படத்தில் பிரசன்னா ஒரு ஸ்டைலீஷ் வில்லனாக நடிக்க உள்ளாதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.