தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: ரஜினி, கமல், டி.ஆர், தாணு உள்ளிட்ட பலர் வாக்குப்பதிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற வேண்டிய தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தேர்தல் நடைபெறும் இடத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்க பதவிக்கு விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன், கேயார் ஆகியோர் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், ஆர்.கே.செல்வமணி, செல்வராகவன், தேவையாணி, ராதாரவி, குஷ்பு சுந்தர், ஐஸ்வர்யா தனுஷ், ரா.பார்த்திபன், தியாகராஜன், பாடகர் விஜய், நாசர், பி.வாசு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.