மருத்துவ குணம் நிறைந்த துளசி, உடல் ரீதியான துன்பங்களை போக்குவதில் தனிச்சிறப்பானது. துளசி இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. எனவே, தினந்தோறும் பூக்களுடன் துளசி இலையை சாப்பிடுபவருக்கு நல்ல ஆரோக்கியம் உத்தரவாதம்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருந்து, மாத்திரைகளை நாடாமல் துளசி இலையை வாயில் போட்டு மெல்லலாம். தொண்டைப் புண்ணால் அவதிப்பட நேர்ந்தால் துளசியை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்த நீரால் வாயை கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.
தலைவலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணம் அளிக்கும். துளசியை அரைத்து அதில் சந்தனப் பொடி சேர்த்துக் கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி தணிவதோடு, உடல் சூடும் குறையும். ஈறுகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, துளசியை உலர வைத்துப் பொடி செய்து அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பசையாக தயாரித்து ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை மென்று அதன் சாற்றை விழுங்க வேண்டும். துளசியில் உள்ள மருத்துவக் குணத்தால் சளி, இருமல் பறந்தோடிவிடும். நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.