ஆணாக பிறந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை: சாதித்த பிரித்திகா யாஷினி

இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கையான பிரித்திகா யாஷினி சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி(வயது 26), சேலம் கலைக்கல்லூரியில் பிசிஏ படித்துவிட்டு, 2016ம் ஆண்டு பிப்ரவரி நடந்த தேர்வில் எஸ்ஐ பதவிக்கான தேர்வை எழுதினார்.

வெற்றிகரமாக தேர்வாகி ஒரு வருடமாக பயிற்சி பெற்று வந்த பிரித்திகா யாசினிக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பதவிக்காக வருவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம், எழுத்துத் தேர்வின் போதும், உடல்தகுதி தேர்வின் போது புறக்கணிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே தனக்கான உரிமைகளை பெற்றார்.

ஆணாக பிறந்து

பிறந்தது ஆணாக இருந்தாலும் தன்னுடைய 20வது வயதிலேயே தான் ஒரு பெண் என புரிந்துகொண்டு அதற்கான அறுவை சிகிச்சைகளை செய்தாராம்.

ப்ரதீப் குமார் என்ற பெயருடன் வலம் வந்த பிரித்திகா யாஷினி, இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவித்ததும் அவர்கள் ஏற்றுக்கொள்ள முதலில் தயக்கம் காட்டியுள்ளனர்.

பெற்றோரின் எண்ணங்களை புரிந்துகொண்டு தானே வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளார்.

வேதனையான தருணம்

தன்னை ஒரு பரிசோதனை எலியாக வைத்துக் கொண்டு மருத்துவர்கள் திருநங்கைகளை பற்றி தெரிந்து கொண்டதாக கூறும் பிரித்திகா, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதே தன் வாழ்வின் கொடுமையான தருணம் என மனம் நொந்து பேசியுள்ளார்.

மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் திருநங்கைகளின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படும் போது வேதனையாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.