வைகோ ஏன் ஜாமீன் வேண்டாம் எனக் கூறி வாலண்டரியாக சிறைக்குப் போகிறார்?

வைகோ ஜாமீன் வேண்டாம் என்று கூறி சிறைக்குச் சென்றுவிட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து கிட்டத்தட்ட ஒதுங்கி இருந்த வைகோ 2009-ல் க்யூ பிராஞ்ச் போலீசார் தொடுத்த வழக்கை, விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி சிறைக்கு சென்றுள்ளார்.

திடீரென இந்த முடிவை வைகோ எடுக்க என்ன காரணம்? என திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் பரபரப்பில் உள்ளனர். மதிமுக பொதுச்செயலர் வைகோ, கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார். கூட்டணி உருவான ஆரம்ப கட்ட கால கட்டத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவும் இருந்தது.

அதேவேளையில், மக்கள் நலக் கூட்டணியை ‘பி டீம்’ என சில தரப்பினர் விமர்சித்தனர். ஆனால், அத்தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது. ஒரு சீட்டு கூட மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைக்கவில்லை.

அதன்பிறகு மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவதாகக் கூறினார் வைகோ. மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சில போராட்டங்களை நடத்தினார் வைகோ. வைகோ எங்கே? ஆனாலும், அரசியலில் அவர் தீவிரமாக செயல்பட வாய்ப்புக் கிடைக்காத நிலையே உருவானது.

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, தமிழக அரசியல் சூழல் கலவரமானபோதும் மதிமுக என்கிற கட்சியையும் வைகோவையும் தேடும் நிலையில் தான் தமிழகம் இருந்தது. சீமைகருவேல அழிப்பு நாயகன் இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். அதற்காகப் போராடினார்.

அதில் வெற்றியும் கிடைத்தது. மதுரை கிளை உயர்நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் என அதிரடியாகக் கூறியது. அந்த தீர்ப்பின் உற்சாகத்தில் வைகோவே களமிறங்கி, பல இடங்களில் சீமை கருவேலத்தை அகற்றிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தல் வந்தது. ஆனால், மதிமுக போட்டியிடுவது குறித்து வாய் திறக்கவில்லை.

இது, வைகோ அரசியலில் இருந்து மெதுவாக விலகுகிறாரா? அல்லது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லையா என்கிற கேள்வியை எழுப்பியது. ஒருவழியாக ஆர்கே நகரில் மதிமுக போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது. வாலண்டியராக சிறை கேட்பது ஏன்? இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு, அவர் மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லையெனில் தன்னை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தொடுத்தார்.

அதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோவை ஜாமீனில் செல்ல விருப்பமா என்று கேட்டும், ஜாமீன் வேண்டாம் என்று உறுதியாகக் கூறி, சிறைக்குச் செல்ல தானே முன்வந்துள்ளார்.

எதற்காக சிறை ஸ்டண்ட்? வைகோவின் இந்த முடிவு, அரசியலில் இன்னும் நான் ஆக்டிவாக இருக்கிறேன் என்பதை மக்களுக்கும் அவருடைய எதிரிகளுக்கும் சொல்வதற்காக, தானே முன்வந்து நடத்தும் ஸ்டண்டா? என விமர்சனமும் கேள்வியும் எழுந்துள்ளது.

இதில் தொண்டர்கள் யாரும் போராட வேண்டாம் என வைகோ கூறியிருப்பது, அவர் சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.