தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார்.
இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ. தேசதுரோக வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த வைகோஇ வழக்கை விரைவாக நடத்தவில்லையெனில் கைது செய்யவும் கோரி இன்று மனு ஒன்றை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இம்மனு மீது எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது. ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தாமாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து கைதாகி புழல் சிறைக்கு சென்றுள்ளார் வைகோ.