‘சசிகலா பெயரை ஏன் தவிர்க்கிறார் தினகரன்?!’ ஆர்.கே.நகர் கலவர நிலவரம்

ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடந்து முடியும் வரையில், தொகுதி மக்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது கேள்விக்குறிதான். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெயரைச் சொல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வருகிறார் தினகரன். கட்சித் தலைமையின் பெயரை மறைப்பது, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தண்டையார்பேட்டையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது. ‘பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல் வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. தேர்தல் முடியும் வரையில் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் துல்லியமாக கவனித்து வருகிறோம்’ என்கின்றனர் வருமானவரித்துறை அதிகாரிகள். தொகுதிக்குள் அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் தினகரன், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் இடையில் நடக்கும் நேரடி மோதல்களால் தொகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ‘கொலைகாரக் கும்பல்’ என பன்னீர்செல்வம் அணி வசைபாடுவதும் ‘துரோகம் செய்துவிட்டுப்போன துரோகி’ என எதிர் அணி குற்றம் சுமத்துவதும் அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது. தற்போது ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வளையத்தில் பன்னீர்செல்வம் வலம் வருவதால், பிரசார பாயிண்டுகளில் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பன்னீர்செல்வம்“தினகரனின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல் என்பதால், அமைச்சர்கள் பலரும் தொகுதிக்குள்தான் வலம் வருகின்றனர். எம்.பி., எம்.எல்.ஏக்கள் என ஆளும்கட்சியின் அனைத்து இயந்திரங்களும் பிரசாரத்தில் வேகம் கூட்டி வருகின்றன. பிரசாரத்தின் எந்த இடத்திலும் பெயரளவுக்குக்கூட சசிகலா பெயரை தினகரன் முன்வைப்பதில்லை. காரணம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள்தான். ‘சசிகலா பெயரை முன்வைத்தால் தோல்வி நிச்சயம்’ என்பதை உணர்ந்திருப்பதால், ஜெயலலிதாவின் சாதனைகளைச் சொல்லியே வாக்கு சேகரிக்கிறார் தினகரன். கூடவே, பெரியகுளம் எம்.பி தேர்தலில் போட்டியிட்டபோது, தினகரனுக்காக ஜெயலலிதா வாக்கு சேகரித்த வீடியோக்களையும் தொகுதியில் பரவலாகக் கொண்டு சேர்க்கின்றனர். ‘ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரனை கட்சிக்குள் கொண்டு வந்து சேர்த்ததே சசிகலாதான். அவர் பெயரை இருட்டடிப்பு செய்வது எந்த வகையில் நியாயம்?’ என சசிகலா குடும்பத்தினர் கொந்தளித்தாலும், அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் வலம் வருகிறார் தினகரன். குடும்பத்தைவிடவும் தொகுதி நிலவரத்தைக் கணித்துக் கொண்டு பிரசாரத்தை வேகப்படுத்துகிறார்” என்கிறார் வடசென்னை அ.தி.மு.க பிரமுகர் ஒருவர்.

“ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார் சசிகலா. செங்கோட்டையன் உள்பட அதிருப்தியில் இருந்த சீனியர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்து சரிக்கட்டினார். அதேநாட்களில்தான், சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் பன்னீர்செல்வம். ‘புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி’ என பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தார் பன்னீர்செல்வம். இன்றைக்கு அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருக்கிறார் சசிகலா. அவரைத் தவிர்த்துவிட்டு பிரசாரம் செய்வதன் மூலம் தினகரனுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பும் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, தொடர்ந்து நம்மிடம் பேசினார்.

ரவீந்திரன் துரைசாமி“பன்னீர்செல்வத்துக்கு மூன்று முறை முதலமைச்சர் பதவியையும் நம்பர் 2 என்ற இடத்தையும் அளித்தவர் ஜெயலலிதா. கட்சியின் பொருளாளர் பதவியும் பன்னீர்செல்வத்தின் வசம் இருந்தது. ஜெயலலிதா இருந்தவரையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தினகரனின் நிலைமை அப்படி இல்லை. ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். அவர் உயிரோடு இருந்தவரையில், கட்சிக்குள் தினகரனால் தலைகாட்ட முடியவில்லை. சசிகலாவால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் பெற்றார். அவரது பெயரைப் புறக்கணிப்பது என்பது, கட்சித் தலைமையை உதாசீனப்படுத்துவது போலத்தான். போர்க்களத்தில் தலைமையைப் புறக்கணித்துவிட்டு, போர் புரிவது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய பிரசார முறை அமைந்திருக்க வேண்டும். மாறாக, சசிகலா பெயரைப் புறக்கணித்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வது என்பது, அந்தக் குடும்பத்தின் மீதான மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்தவே செய்யும்” என்கிறார் உறுதியாக.

“தினகரன் அளவுக்கு நிர்வாகிகள் பலத்தைக் காட்ட பன்னீர்செல்வத்தால் முடியவில்லை. அவருடன் வரும் ஆட்களை விடவும் போலீஸாரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. பூத் வாரியாக துல்லியமாக விநியோகித்து வருகிறார் தினகரன். இன்று நடக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில், பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த உறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என நம்புகிறோம்” என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். ஆளும்கட்சியின் மோதல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பிரசாரத்தில் வேகம் காட்டி வருகிறார் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ். ‘ஆடி காரிலோ, பார்ச்சூனர் காரிலோ வந்து தாராளமாக பிரசாரம் செய்யுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. பிரசாரம் செய்வது உங்கள் உரிமை. ஆனால், ஆர்.கே.நகரின் குறுகலான சாலைகளுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள்’ என மக்கள் நிலைமையை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார் சி.பி.எம் வேட்பாளர் லோகநாதன்.

‘பணமா? மக்கள் பிரச்னைகளா?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள்.