வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனாவின் உதவி தேவையில்லை: டிரம்ப் அதிரடி

வடகொரியாவும், தென்கொரியாவும் பரம்பரை எதிரி நாடுகளாக உள்ளன. இதில் வடகொரியாவுக்கு சீனாவும், தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தென்கொரியாவை தாக்குவோம் என்று வடகொரியா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது ராணுவத்தின் ஒரு பிரிவை தென்கொரியாவில் நிறுத்தி உள்ளது.

இதனால் கோபம் அடைந்த வடகொரியா அமெரிக்காவை நேரடியாக தாக்குவோம் என்று கூறுகிறது. அமெரிக்கா, வடகொரியாவில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது. இங்கிருந்து சென்று அமெரிக்காவை தாக்குவது கடினம் என்பதால் அமெரிக்கா வரை சென்று தாக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா தயாரித்து உள்ளது.

மேலும், இந்த ஏவுகணைகளில் அணுகுண்டை ஏற்றிச்சென்று தாக்கும் வகையில் அணுகுண்டுகளையும் தயாரித்து சோதனை நடத்தி உள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா போராடி வருகிறது. இதற்காக சீனாவின் உதவியையும் அமெரிக்கா கேட்டுள்ளது.

ஆனால் நட்பு நாடான வடகொரியாவுக்கு எதிராக சீனா எந்த நடவடிக்கையையும் எடுக்க தயாராக இல்லை. இதனால் அமெரிக்காவுக்கு உதவ அந்த நாடு முன்வரவில்லை.

இது சம்மந்தமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

வடகொரியா அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலும் அந்த நாட்டை சமாளிக்க அமெரிக்காவால் முடியும். அவர்கள் அணுஆயுதத்தை காட்டி அச்சுறுத்துகிறார்கள். அதையும், அமெரிக்காவால் முறியடிக்க முடியும்.

இந்த வி‌ஷயத்தில் சீனாவிடம் ஆதரவு கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் உதவ முன்வருவார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் உதவினால் சீனாவுக்கு தான் நன்மை. ஒருவேளை உதவவில்லை என்றால் யாருக்குமே நன்மை இருக்காது.

சீனாவினுடைய ஆதரவு இல்லாமலேயே வடகொரியாவை எல்லா வகையிலும் சமாளிக்கும் நிலையில் தான் அமெரிக்கா இருக்கிறது.

இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறினார்.