தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரையை ஒட்டிய நாடு ஈக்குவடார். ஈக்குவடாரில் இடதுசாரி கட்சியை சேர்ந்த ரஃபேல் கோரியா அதிபராக உள்ளார். இவரை பதவிக்காலம் வருகின்ற மே மாதம் முடிவடைய உள்ளது.
இதனையடுத்து, அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான லெனின் மொரினோ போட்டியிட்டார். அதேபோல், எதிர்க்கட்சி சார்பில் கல்லியர்மோ லஸ்ஸோ களத்தில் இருந்தார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (ஏப்.2) நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியின் லெனின் மொரினோ 51.07 சதவீதம் வாக்குகளும், எதிர்க்கட்சியின் லஸ்ஸோ 48.93 சதவீதம் வாக்குகளும் பெற்றனர். நேற்று வரை 96 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இதனால், 50 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால் லெனின் மொரினோ அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தலைநகரில் ஒன்று கூடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து, லெனின் மொரினோவின் வெற்றியை அங்கீகரிக்க வருமாறு எதிர்க்கட்சிக்கு ஈக்குவடார் தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது. மேலும், மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இடதுசாரி கட்சியின் லெனின் மொரினோ வெற்றி பெற்றுள்ளது விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது