அமெரிக்காவின் லேப்டாப் தடையால் எந்த பாதிப்பும் இல்லை: எதிஹாட் ஏர்வேஸ்

எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் தடை விதித்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
வளைகுடா நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலிருந்து மேற்சொன்ன பொருட்களை எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அமெரிக்கா அரசு அறிவித்த இதே திட்டத்தை பிரிட்டன் அரசும் அமல்படுத்தியது. துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிசியா, சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டனுக்கு வரும் போது விமானங்களில் லேப்டாப், டேப்லட், ஐ-பேடு போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர பிரிட்டன் தடை விதித்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் லேப்டாப் தடையால் அந்நாட்டிற்கான விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எதிஹாட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “அமெரிக்காவிற்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கம் போலவே உள்ளது. அமெரிக்காவின் அறிவிப்பில் இருந்து பயணிகளின் வர்த்தகம் பாதிப்பதை தடுப்பதற்கு எதிஹாட் ஏர்வேஸ் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.