தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக் காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள் அவரது உருவப்படத்தை வைத்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
அத்துடன் அவரது நினைவாக அஞ்சலிப் பாதாதைகள் தொங்கவிட்டு 36 ஆவது நாள் போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.
இதன் போது கலந்து கொண்ட பட்டதாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் திருகோணமலையைச் சேர்ந்த எங்கள் சகோதரியொருவர் அகால மரணமடைந்ததையொட்டி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளோம். அவரது நினைவாக உணர்வு பூர்வ அஞ்சலி நிகழ்வை நடாத்தியுள்ளோம்.
ஒவ்வொரு பட்டதாரிகளும் தங்கள் கனவுகளைச் சுமந்த வண்ணம் எங்களுக்கு இனியாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை . இதனால் தான் ஒரு சகோதரியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
அவர் அரசாங்க வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உட்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். இவ்வாறான முடிவுகளை ஏனைய பட்டதாரி மாணவர்களும் எடுக்காதிருப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.