கடனில் மூழ்கியுள்ளது இலங்கை!

இலங்கை கடனில் மூழ்கியுள்ளது என்றும் 2026ஆம் ஆண்டு வரை கடனை மீள செலுத்தும் காலம் உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொடகாவலையில் நேற்று (02) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் நாட்டைக் கடனில் இருந்து மீட்பதுடன், அபிவிருத்தியையும் செய்ய அரசு திட்டங்களை வகுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

3600 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.

முன்னாள் அரசின் வினைத்திறனற்ற ஆட்சியில் பெற்றுக்கொண்ட கடன்களே இவ்வாறு பெருக்கமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்குள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனைச் செலுத்த வேண்டும்.

நல்லாட்சி அரசு மேற்படிக் கடனைச் செலுத்தும், அதன் அடிப்படையிலேயே சர்வதேச நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றோம்.

கடனை மீளச் செலுத்தும் முறைமைகள் தொடர்பில் வாரந்தோறும் அரசு பேச்சுக்களை நடத்துகின்றது.

கடனைச் செலுத்தும் காலப்பகுதியில் நாட்டில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இவ்வருடம் தொடக்கம் அப்பாந்தோட்டை துறைமுகத்துக்காக முன்னாள் அரசு பெற்றுக்கொண்டுள்ள கடனின் வட்டித்தொகையும் அதிகரித்துள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.