நாட்டை ஆட்சி செய்யும் தேசிய அரசின் இரண்டு கட்சிகளையும் விட மக்களின் ஆதரவு எமக்கே அதிகமாக உள்ளது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வென்னப்பு பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
பிரதான இரண்டு கட்சிகளும் இன்று நாட்டை ஆளுகின்றன. அபிவிருத்தி முடக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. தற்போதைய அரசு நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்தே ஆட்சி செய்கின்றது.
மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அரசியல் பழிவாங்கல்களே அதிகமாக இடம்பெறுகிறது. இந்த ஆட்சியின் மீது மக்களின் வெறுப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
தற்போதைய சூழலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தாண்டி மக்களின் ஆதரவு எமக்கே அதிகமாக உள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதற்கான களமாக அமையும் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.