இந்து மதத்தில் எனக்கு பாடம் எடுக்க தேவையில்லை: பா.ஜ.க.வுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

மேற்குவங்காள மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தின் காரக்பூர் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
எல்லா மதங்களும் ஒன்று என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். துர்கா பூஜையை நான் கொண்டாடி வந்தாலும், ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடி வருகிறேன்.
நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தேன். மதத்தினை அரசியலுக்கு பயன்படுத்துவோரிடம் இருந்து இந்து மதம் குறித்த எந்த பாடமும் எனக்கு தேவையில்லை. வெறுப்பு அரசியலை மேற்குவங்காளம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.
தக்‌ஷினேஸ்வரர் கோவிலில் ஆரத்தி எடுக்க நாங்கள் தடைவிதித்துள்ளதாக ஒரு மத்திய மந்திரியே தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மத்திய மந்திரி எப்படி தவறான தகவலை பரப்ப முடியும்? எந்த மாதிரியான நாட்டில் வாழ்கிறோம்? அவர்களுக்கு(பி.ஜே.பி.) நல்ல சிந்தனை வரவேண்டும் என்று கடவுளிடம் வழிபடுகிறேன். மாகாளி வழிபாட்டில் நாங்கள் அரசியலை புகுத்த மாட்டோம்.
வதந்திகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள கூடாது. சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை சரிபார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும் இவ்வாறு கூறினார்.