ஐ.பி.எல். சீசன்-10 டி20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐதராபாத் அணியில் ஆப்கானிஸ்தானின் 18 வயது லெக்ஸ்பின்னர் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். முதன்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 5 வீரர்கள் இடம்பிடித்தனர். இதில் ரஷித்கானை 4 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது ஐதராபாத் அணி.
புதன்கிழமை நடைபெறும் முதல் போட்டியில் களமிறங்க ரஷித் கான் ஆவலாக இருக்கிறார். அதுவும் அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறார்.
இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘இந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கெதிராக முதல் போட்டியில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது அதிரடி வீரரான டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த விரும்புகிறேன். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஒருவர் டி வில்லியர்ஸ் என்பது எல்லோருக்குத் தெரியும். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சவாலானதாக இருக்கும்.
ஐதராபாத் அணியின் டாம் மூடி, விவிஎஸ் லட்சுமண் மற்றும் முத்தையா முரளீதரன் ஆகியோரை சந்திப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை அள்ளியுள்ளார். அவரிடம் இருந்து சில ஆலோனைகளை பெற்று என்னுடைய பந்து வீச்சு திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.