நெடுந்தீவு பகுதியில் 12 வயது நிரம்பிய சிறுமியான யேசுதாசன் லக்சினி என்பவரை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வின் பின் முருங்கைக்கல்லால் தலையில் அடித்து கொலை செய்த வழக்கு நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த வழக்கின் விசாரணை நேற்றைய தினம் யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
2012 ம் ஆண்டு 3ம் மாதம் 3ம் திகதி காலை 8 மணியளவில் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மீன் வாங்குவதற்காக நெடுந்தீவு சந்தைக்கு சென்றுள்ளார். அவர் சந்தைக்கு செல்லும் வழியில் இரு பெண்கள் (3,4 சாட்சிகள்) அவரை கண்டு எங்கு போகிறாய் என கேட்ட போது சந்தைக்கு செல்வதாக கூறி சிறுமி சென்றுள்ளார்.
குறித்த சிறுமிக்கு பின்னால் எதிரியும் செல்வதனை அவதானித்துள்ளனர். இந்நிலையில் சந்தைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. மாலை 3 .15 மணியளவில் குறித்த சிறுமியின் இறந்த உடல், பெருக்கமரத்தடி பிள்ளையார் கோவிலின் அருகில் முட்புதர் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப் பட்டது.
அதாவது அன்று விறகு பொறுக்கச் சென்ற தர்சினி என்பவர் அப்பகுதியில் பெண் பிள்ளை ஒன்று குப்புறப்படுத்தபடி உள்ளது எனவும் தலை மற்றும் மூக்கில் இரத்தம் வடிந்துள்ளதை அவதானித்துள்ளதாகவும் அந்த இடத்தை விட்டு ஓடி சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு என்ன கொடூரம் நடைபெற்றது என நிரூபிப்பதற்கு கண்கண்ட சாட்சிகள் இல்லை.இருப்பினும் சூழ்நிலை சான்றுகளை முற்படுத்த முடியும் என தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி, சூழ்நிலையோடு சம்பந்தப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கை, பற்தட்டு தடயவியல் கட்டமைப்பு அறிக்கை. எதிரியின் வாக்குமூலத்தில் இருந்து சான்றாக பயன்படுத்தக் கூடிய சான்றுகள் என்பவற்றை சான்றுகள் மூலம் முற்படுத்த முடியும் எனத் தெரிவித்து சாட்சிகளை அழைத்து வழக்கை நெறிப்படுத்தினார்.
வழக்கின் முக்கிய சாட்சியான 5ம் சாட்சி சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ். சிவரூபன் சாட்சியமளிக்கையில்,
யேசுதாசன் லக்சினி என்ற 12 வயது நிரம்பிய சிறுமியின் பிணப் பரிசோதனையை ஊர்காவற்றுறை நீதவானின் உத்தரவுக்கமைய கடந்த 2012.03.04 அன்று நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் மேற்கொண்டேன்.
சிறுமி ஒருவர் இறந்த நிலையில் ஆடைகள் சில கழற்றப்பட்டு, சடலத்தின் அருகில் காணப்பட்டது. அண்மையில் 100 ரூபாய் பணம் நீல நிற பொலித்தீன் செருப்பு, சைக்கிள், உள்ளாடை, இரத்தம் படிந்த முருங்கைக்கல் என்பன காணப்பட்டன.
சிறுமியின் சடலம் முகம்குப்புற நிலத்தை பார்த்தவாறு இரத்தம் கசிந்த நிலையில் இருப்பதை அவதானித்தேன். தேவையான ஆதாரப் பொருட்களை எடுப்பதற்கு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியதுடன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வைத்தியத்துறை சார்ந்த பிரதான தடயப்பொருட்களாக பிறப்பு உறுப்பில் இருந்து வடிந்த இரத்தம், விந்தணு போன்ற திரவத்தினை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாரிடம் கொடுத்தேன்.
சிறுமியின் மேல் சட்டையில் இருந்த 4 முடிகள் எடுத்து பொலிஸாரிடம் கொடுத்தேன்.சிறுமியின் உடலில் 21 காயங்களை அவதானிக்க முடிந்தது. அத்துடன் மண்டை யோட்டில் பல வெடிப்பு காயங்கள் காணப்பட்டது.மூளை மென்சவ்வு பாதிக்கப்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டு நேரடியாக மூளை கலன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மொட்டையான தட்டை ஆயுதத்தால் மண்டையோடு கிழிந்து மூளை கலன் பாதிப்படைந்து இறப்பு ஏற்பட்டுள்ளது என சாட்சியமளித்தார்.
நிபுணத்துவ பொலிஸார், விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரி உட்பட 8 சாட்சிகள் சாட்சியமளித்தனர். இரவு 7.10 மணிவரை சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றன.
வழக்கின் தொடர் விசாரணையை நாளை மறுதினம் 6ம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளதுடன் எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந், எதிரிதரப்பு சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி கே. ரஞ்சித்குமார், சாட்சிகள் நலன் கருதி சட்டத்தரணி திருமதி சுபாஜினி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.