தீர்ப்பை எதிர்த்தால் ‘நாடு மிஞ்சாது’

“மாலபே சைட்டம் (மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகம்) தொடர்பான நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காது பேராட்டத்தில் ஈடுபட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மேன் முறையீடு செய்திருந்தாலும் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகும்.

தீர்ப்புகளுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பு செய்தால் நாட்டின் சிறு பகுதி கூட மிஞ்சாது” என, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (04) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், நடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

“சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் 7,200 பேர் 70 நாட்களாக வகுப்புகளுக்குச் செல்லாமல் உள்ள நிலையில் அமைச்சரவையில் உள்ள 93 அமைச்சர்கள் அவர்களைச் சென்று சந்தித்தீர்களா” என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “சைட்டம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதனை மதிக்காது போராட்டத்தில் ஈடுப்பட்டால் என்ன செய்ய முடியும்.

அது தொடர்பில் மேன் முறையீடு செய்திருந்தாலும், வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது நடைமுறையிலேயே உள்ளது. வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்துக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் இந்த நாட்டின் சிறு பகுதிகூட மிஞ்சாது” என்றார்.