பவானியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் வறட்சிக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.40 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிவாரணம் ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
நாளை முதல் நடக்க உள்ள இந்த தொடர் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவிக்கும். இதேபோல் வரும் 17-ந்தேதி முதல் மாவட்ட தலை நகரங்களில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடக்கும் கால வரையற்ற போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
அப்போது மாநில பொருளாளர் ஆறுமுகம், நிர்வாக குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் உடன் இருந்தனர்.