பண பட்டுவாடாவை தடுக்காவிட்டால் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்துவதில் பலன் இல்லை: தமிழிசை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கி உள்ள இசையமைப்பாளர் கங்கை அமரனை ஆதரித்து, கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கங்கை அமரனை ஆதரித்து அவர் கொருக்குப்பேட்டையில் பிரசாரம் செய்தார். அவருடன் பா.ஜ.க. தேசிய இளைஞரணி துணைத்தலைவர் முருகானந்தம் உள்பட நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை டி.எச். சாலையில் உள்ள தேர்தல் பணிமனையில் ‘ஓட் பார் பி.ஜே.பி.’ என்னும் புதிய செல்போன் செயலியை (ஆப்) டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏதோ பேருக்குத்தான் நடப்பதுபோல உள்ளது. வாக்காளர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது?, பணம் வழங்கப்படுகிறதா? போன்றவற்றை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதே இல்லை.

ஒவ்வொரு வேட்பாளரையும் கண்காணிக்க தலா 4 கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம்.

ஒவ்வொரு தெருவிலும் திடீர் பந்தல் அமைக்கப்பட்டு பண பட்டுவாடா ஜோராக நடக்கிறது. பண பட்டுவாடாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இங்கு இடைத்தேர்தலை நடத்துவதில் எந்த பலனும் இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உலகமே உன்னிப்பாக பார்க்கும் தேர்தலாக மாறிவிட்டது. இங்குள்ள பண பலத்தையும், அதிகார பலத்தையும் தேர்தல் ஆணையம் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. எனவே, தேர்தல் ஆணையம் இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு மோசமான சூழ்நிலைக்கு சென்றுவிடும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பேட்டியின்போது வேட்பாளர் கங்கை அமரன் உடன் இருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் இந்தி திணிப்பு நடந்து வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- மு.க.ஸ்டாலினின் தமிழ் உணர்வுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் நாங்கள் அல்ல. திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழுக்கு மரியாதையே கிடைக்கவில்லை. தமிழ் வாழ்க என்று சொல்லும் அவர்கள், தமிழை ஆட்சி மொழியாக அறிவித்தார்களா? தமிழுக்கு உண்மையான மரியாதை பா.ஜ.க. ஆட்சியில் நிச்சயம் ஏற்படும். ஏனென்றால் 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் முழுமையான தோல்வி மட்டும்தான் மிஞ்சியிருக்கிறது.

கேள்வி:- மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு கேட்ட நிவாரண தொகையைவிட குறைவாக வழங்கப்பட்டு இருக்கிறதே?

பதில்:- அந்த தொகையை முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தார்களா? என்று கூற சொல்லுங்கள். நிறைவாக கொடுத்தால் நல்ல அரசு, குறைவாக கொடுத்தால் கெட்ட அரசா? முதலில் இது பேரிடர் நிவாரணம் என்பதையே மறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் நிர்வாக ரீதியாக சட்டவிதிகள் உள்ளன.

கேள்வி:- ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படுமா?

பதில்:- மக்கள் நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது.

மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.