இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்த வீரர்களுக்காக ஊதிய தொகை ‘ஏ’, ‘பி’, ‘சி’ என்று கிரேடு வாரியாக முறையே ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் என்று சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உயர்த்தப்பட்டது.
அத்துடன் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகளுக்கான கட்டணமும் முறையே ரூ.15 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.3 லட்சம் என்று அதிகரிக்கப்பட்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை. ரூ.2 கோடி என்பது ஒன்றுமில்லை.
இது வேர்க்கடலைக்கு சமமானது. டெஸ்ட் வீரர்களுக்கான கிரேடு ஒப்பந்த தொகை இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும். உலகின் டாப் வீரர்களுக்கு இணையாக புஜராவுக்கு அதிக தொகை வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நமது வீரர்களை விட அதிக தொகையை ஊதியமாக பெறுகிறார்கள்’ என்றார்.